Sunday, May 05, 2013

உண்மை கலந்த நாட்குறிப்புகள்

....கொஞ்ச காலம் நானும் சிறு வயதில் வாய்ப்பாட்டு கற்றுக்கொண்டேன். வீட்டுக்கு அருகில் இருக்கும் அந்த பாடசாலை. பெயர் நினைவில்லை. நிறைய கற்றுக்கொடுத்தார்கள். வாய்ப்பாட்டு. கீபோர்ட்.  டிராயிங். எல்லாம். பாடசாலை இருந்த செம்மண் தெரு, இரு ஓரங்களிலும்  ஓடிக்கொண்டிருக்கும் புதுச்சேரியின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான ஓபன்  ட்ரைனேஜ், முதல் முதலில் பார்த்த மிகச்சிறிய கான்(குழாய்), அந்த ஓலைப்பாய், ஒருமுறையேனும் தொட்டுப்பார்துவிடவேண்டும் என்று நினைத்த ஸ்ருதிப்பெட்டி, மணலிலிருந்து துருத்திக்கொண்டிருக்கும் வெள்ளை பெயிண்ட் அடித்த பாதி செங்கற்கள், ஜண்டை வரிசை, பக்கத்துக்கு வகுப்பிலிருந்து கசியும் ராகவேணு கோபாலா, ஆறுமணியளவில் தாக்கும் கொசுக்கள், வகுப்புக்கு முந்தைய நிமிடங்களில் பேனாவை எரோப்லேன் ஆக்கி விளையாடிக்கொண்டிருந்தது,எல்லாம் நினைவிருக்கிறது. மனிதர்களின் முகங்கள் மட்டும் மிஸ்ஸிங்.

முதலில் வகுப்பெடுத்த ஆசிரியை அன்பானவர். நாங்கள் பாட்டுக்கு நிம்மதியாக ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டிருந்தோம். வீட்டிலும் கொஞ்சம் மரியாதை கிடைத்தது. விருந்தினர் வந்தால் பாடிகாட்டசொல்லும் தொல்லைகளும் நடந்தன. பிறகுதான் வேறொரு ஆசிரியை வகுப்பெடுக்க ஆரம்பித்தார். இவர் பாடசொல்லும்போதெல்லாம் நான் நோட்டுபுத்தகத்தை பார்த்து பாடுவதை கவனித்தவர், இனிமேல் எல்லாவற்றையும் மனனம் செய்துதான் பாடவேண்டும் என்று உத்தரவு போட்டார். நியாயமானதுதான். நியாயமானவைளுக்கும் பிடித்த/ எதார்த்தமானவைகளுக்கும் மலையளவு வித்தியாசம் உண்டு. Ideal value vs Actual value. இப்படித்தான் ஒருமுறை பள்ளியில்,ஒரு பெண்டுலம் எக்ஸ்பெரிமென்ட். g = 9.81 என்று வந்தே தீரவேண்டும், இல்லையேல் பெரும் பாவம் என்று கருதப்பட்டது. ஒரு மாணவனுக்கு கொஞ்சம் முன்னும் பின்னுமாக ரீடிங் வந்திருக்கிறது. உடனே கொதித்தெழுந்த எங்கள் ஆசிரியர், எக்ஸ்பெரிமேன்ட்டை திரும்பவும் செய்யவேண்டும் என்று கூறிவிட்டார். நியாயம்தான். இன்னொரு மாணவனுக்கு 9.81 புள்ளி பிசகாமல் வந்திருக்கிறது. நியூடனுக்கே இப்படி வர வாய்ப்பில்லை என்று கருதிய ஆசிரியர், அவனையு.... சரி எங்கு ஆரம்பித்தோம்? மனனம். இந்த மனனம் செய்யும் தொல்லை பாட்டு வகுப்பிலும் புகுந்து விட்டது எனக்கு பெரும் ஏமாற்றத்தைக்கொடுத்தது. பக்கத்துக்கு வகுப்புகளில் டிராயிங் பயிலும் மாணவர்களைப்பார்த்து ஏகத்துக்கும் ஏக்கம் வர ஆரம்பித்தது. அந்த ஆசிரியையோ மனனம் என்பதில் ரொம்பவுமே பிடிவாதமாக இருந்தார். பேருந்து நிறுத்தத்தில் என்னை அம்மாவுடன் பார்க்கும்போதெல்லாம் 'உங்க பையன் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் மெமரைஸ் பண்ணனும்.' என்று சொல்ல ஆரம்பித்தார்.

ம்ஹ்ம் இது சரிப்படாது, என்று தவித்துக்கொண்டிருக்கும்போதுதான், சில நாட்களில் நாங்கள் வீடு மாறினோம். இப்போது பாடசாலைக்கு செல்ல ஒரு பிரதான சாலையை கடக்க வேண்டியிருந்தது. I took advantage of it. சாலையை கடப்பது ரொம்பவே கடினமாக இருக்கிறது என்று வீட்டில் கோரினேன்/கூறினேன். அந்த சாலை வேறு accident zone என்று பிரசித்தி பெற்றிருந்தது. பெருமூச்சிட்டபடி வீட்டிலும் இனிமேல் பாட்டு வகுப்புக்கு செல்ல தேவையில்லை என்று கூறிவிட்டார்கள். என் பங்குக்கு நானும் நிம்மதிப்பெருமூச்சு விட்டேன். ஆனால் சில நாட்களில் வேறொரு இடி இறங்கியது. அந்த பகுதியில் ஏதோ ஒரு வீட்டில் சின்மயா மிஷன் காரர்கள்  வந்து என்னவோ வகுப்பெடுக்கிரார்கள் என்று கேள்விப்பட்டு அதற்கு செல்லும்படி நேர்ந்தது. வகுப்பு ஞாயிறு தோறும். குளித்து தொலைத்துவிட்டுதான் செல்ல வேண்டும். அங்கே சில ஸ்லோகங்கள், அதன் அர்த்தங்கள், மேலும் இந்து மத சடங்குகளின் விஞ்ஞான விளக்கங்கள் எல்லாம் சொல்லிக்கொடுத்தார்கள். அங்கே நண்பர்கள் கிடைத்தாலும் எனக்கு என்னவோ அந்த வகுப்பில் இருப்பது பெரும் அசௌகர்யத்தை கொடுத்தது. கொஞ்சம் கொஞ்சமாக பங்க் அடிக்க ஆரம்பித்தேன். எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு பையனும் அதே வகுப்புக்கு சென்றதால், ஞாயிரானால் அவன் வேறு வீட்டுக்கு வந்து வகுப்புக்கு கூப்பிட ஆரம்பித்தான்.  
ஒரு ஞாயிறு காலை அப்பாவின் பைக்கில் உட்கார்ந்து 'டுர்ர்ர்' சத்தம் செய்துகொண்டிருக்கையில், வந்தான்.
'கிளாசுக்கு வரலியா?'
'டுர்ர்ர்...குளிச்சிட்டுதான் வரணுமா?'
'அமாம், பின்ன?'
'அப்ப ஸாரி. டுர்ர்ர்..... '

கொஞ்ச நாட்களில், நான் அந்த 'ஆன்மிக' வகுப்பை புறக்கணிப்பது வீட்டிலுள்ளவர்கள் கவனத்திற்கு வந்தது. ஒரு வோல்டேஜ் குறைந்த, மஞ்சள் பல்ப் பலவீனமாக ஒளிர்ந்துகொண்டிருந்த இரவில் அப்பா கேட்டார், 'ஏண்டா, இப்பல்லாம் அந்த கிளாசுக்கு போகரதில்லையா?'
பத்து வயதில் நான் கூரிய அந்த  பதிலுக்கு பிறகு அப்பா மௌனமாகவே இருந்தது நினைவிருக்கிறது:
'அவங்கல்லாம் ரொம்ப மதவெறியோட இருக்காங்கப்பா.'

****
'உண்மை கலந்த நாட்குறிப்புகள்' (அ.முத்துலிங்கம்) படிக்கையில் எழும்பிய நினைவுகள். ஒரு புத்தகம் இப்படி எழுத தூண்டுகிறதென்றால் அது அட்டகாசமாக இருக்கிறதென்றுதானே பொருள்? அட்டகாசமாக இருக்கிறது. Enjoying it!
****

No comments:

Post a Comment